ஊரடங்கால் கோவில்களை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊரடங்கால் கோவில்களை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
ஊரடங்கால் கோவில்களை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முன்புறம் பூஜை பொருட்கள், மாலைகள், அம்மன் படங்கள் விற்பனை செய்வதற்காக ஏராளமான கடைகள் உள்ளன. வியாபாரிகள் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.
சிரமம்
மேலும் பெண்கள் பலர், ஆங்காங்கே சாலையோரத்தில் பூ வியாபாரமும் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கால் பூஜை பொருட்கள், மாலைகள், அம்மன் படங்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பூக்கள், மாலைகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
பூக்கள், மாலைகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் பெண்கள் பலர், பூக்களை விற்பனை செய்வதற்காக ஆங்காங்கே சாலையோரத்தில் அமர்ந்து இருக்கின்றனர். ஆனால் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதால் எந்தவித வியாபாரமும் நடக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கோவில் திறக்கப்பட்டால் மட்டுமே பூக்கள், மாலைகள் வியாபாரம் நடைபெறும். இதனால் கோவில்கள் திறக்க எப்போது அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்த்து காத்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நிவாரண உதவி வழங்க கோரிக்கை
மேலும் அவர்கள் கூறும்போது, சாமி பட கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், டீக்கடைகள் கோவில் முன்புறம் உள்ளன. இந்தக் கடைகளை நம்பி ஏராளமான உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை இல்லாததால் எங்களுக்கு வியாபாரம் நடக்கவில்லை.
இந்தக் கடைகள் அனைத்தும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளன. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஊரடங்கால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நிவாரண நிதி உதவி எங்களுக்கும் வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல் சுவாமிமலை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லாததால் பூஜை பொருட்கள், சாமி படங்கள், பூக்கள், மாலைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story