சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம், 41 பவுன் நகைகள் கொள்ளை
திண்டுக்கல் அருகே சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் மற்றும் 41 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டியை அடுத்த காமாட்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர், திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வி கணவருக்கு துணையாக, சோப்பு கம்பெனிக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை 2 மகன்களும், பாட்டி வீட்டுக்கு சென்று விட்டனர். இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு, சோப்பு கம்பெனிக்கு சென்றனர். அங்கு 2 பேரும் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். பின்னர் இரவு சுமார் 8 மணிக்கு கம்பெனியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
கொள்ளை
அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் ஒரு அறையில் இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதோடு பீரோவில் இருந்த துணிகள், பொருட்கள் வெளியே வீசப்பட்டு இருந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.23 லட்சம் மற்றும் 41 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி சிறிது தூரத்தில் நின்று விட்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான கொள்ளையர்கள் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே வீட்டில் இருந்த 5 கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் வேறு திசையில் திருப்பி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஜன்னல் கம்பி அறுத்து எடுக்கப்பட்டு இருந்தது.
வலைவீச்சு
எனவே, கணவன், மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்வதை அறிந்த கொள்ளையர்கள், ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து கைவரிசை காண்பித்து இருப்பது தெரியவந்தது. மேலும் தங்களின் உருவம் பதிவாகாமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை திருப்பி வைத்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story