சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் 10.49 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்


சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் 10.49 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு  தலா 5 கிலோ அரிசி மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
x
தினத்தந்தி 11 Jun 2021 2:39 AM IST (Updated: 11 Jun 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் தி.மு.க. சார்பில் 10.49 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்று சேலத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

சேலம்:
ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் தி.மு.க. சார்பில் 10.49 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்று சேலத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
நிர்வாகிகள் கூட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சேலம் வருகிறார். இதையொட்டி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவசர கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
 டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திருச்சியில் இருந்து சேலம் வருகிறார். 
5 கிலோ அரிசி
பின்னர் அவர் சேலத்தில் தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 
இதைத்தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) மாலை தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வந்து பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்குகிறார். மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அவர் சென்று குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக தலா 5 கிலோ அரிசி வழங்குகிறார். 
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 லட்சத்து 49 ஆயிரத்து 698 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. 1,591 ரேஷன் கடைகளும் உள்ளன. கொரோனா ஊரடங்கு என்பதால் தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தி.மு.க. சார்பில் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 5,250 டன் அரிசி தேவைப்படும். இந்த நிகழ்ச்சியை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் தங்கள் ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்க வேண்டும். 
பந்தல் அமைத்து...
தமிழக அரசு சார்பில் வருகிற 15-ந் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தி.மு.க. சார்பில் சாமியானா பந்தல் அமைத்து கடையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு தி.மு.க. சார்பில் 5 கிலோ அரிசி பையை வழங்கலாம். தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களுக்கும் அரிசி வழங்குவதன் மூலம் பொது மக்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்படும்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களுக்கு தேவையான விஷயங்களை அறிந்து அவர்களுக்கு உதவி புரிய வேண்டும். சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்க வேண்டாம். நிர்வாகிகளும் குறைந்த அளவில் மட்டுமே பங்கேற்க வேண்டும். அதுவும் சமூக இடைவெளியுடன் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார். 
இந்த கூட்டத்தில் சேலம் மாநகர செயலாளர் ஜெயக்குமார், மத்திய மாவட்ட பொருளாளர் சுபாஷ், வக்கீல் எஸ்.ஆர். அண்ணாமலை மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story