பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் அணையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் அணையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மேட்டூர் அணை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து நாளை (சனிக்கிழமை) காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மேட்டூர் அணைக்கு வந்தார்.
அங்கு அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் பாயிண்ட் மற்றும் அணையில் இருந்து மேல்மட்ட மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் இடம் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆலோசனை
இதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். அணையின் நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன்(சேலம் வடக்கு), சதாசிவம் (மேட்டூர்), சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அனல்மின் நிலையம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த தீ விபத்து நடைபெற்ற இடத்தையும் அமைச்சர் செந்தி்ல் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கலெக்டர் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேட்டூர் அனல் மின் நிலைய தலைமை என்ஜினியர்கள், கண்காணிப்பு என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story