வெண்ணந்தூர் அருகே பட்டா நிலம் வழியாக மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை


வெண்ணந்தூர் அருகே பட்டா நிலம் வழியாக மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 Jun 2021 9:09 PM GMT (Updated: 10 Jun 2021 9:09 PM GMT)

வெண்ணந்தூர் அருகே பட்டா நிலம் வழியாக மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே பட்டா நிலம் வழியாக மூதாட்டியின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டா நிலம்
வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாக்காடு அருந்ததியர் காலனியை சேர்ந்த கொண்டாயி (வயது 80) என்பவர் நேற்று காலை இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் பொன்னாக்காடு பகுதியில் இருந்து வடுகம்பாளையம் மயானம் செல்வதற்கு பூபதி (42) என்பவரது தோட்டத்தின் வழியாக சென்று இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்து வந்தனர். 
அதேபோல நேற்று வழக்கம்போல் இறந்த மூதாட்டியின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அப்போது தோட்டத்து பகுதியில் சென்றபோது பூபதி மற்றும் அவருடைய உறவினர்கள்  இந்த வழி எங்களுடைய சொந்த பட்டா நிலத்தில் உள்ளதால் நீங்கள் வேறு பொது வழியாக உடலை கொண்டு செல்லுங்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 
பேச்சுவார்த்தை
இதையடுத்து இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டை குமார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, ராசிபுரம் தாசில்தார் ரமேஷ் கண்ணன், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பூபதி தன்னுடைய நிலத்தின் வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். 
இதையடுத்து மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மூதாட்டியின் உடலை பூபதி தோட்டத்திலேயே வைத்து விட்டு சென்று விட்டனர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற ஊர் பொதுமக்கள் மற்றும் தோட்ட உரிமையாளருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு அந்த வழியாக உடலை எடுத்து செல்ல ஒருமுறை மட்டும் அனுமதி கூறுவதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து மூதாட்டியின் உடலை எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். 
தீர்வு
மேலும் இதுகுறித்து ஒரு வாரத்துக்குப் பிறகு இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பட்டா நிலத்தை அளந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story