மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2¾ கோடி கையாடல்


மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2¾ கோடி கையாடல்
x
தினத்தந்தி 11 Jun 2021 2:39 AM IST (Updated: 11 Jun 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்தூர்:
மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.
பணம் கையாடல்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் கணேசன். இவர் மத்தூர் கிராம பிரிவில் வருவாய் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஜெகதேவி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த போது ரூ.18 லட்சம் கையாடல் செய்ததாகவும், அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு கையாடல் பணத்தை வட்டியுடன் 23 லட்சம் ரூபாய் கணேசனிடம் இருந்து வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கணேசன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மத்தூர் கிராம பிரிவில் வசூலாகும் பணத்தில் மீண்டும் அவர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
ரூ.2¾ கோடி 
சமீபத்தில் மத்தூர் மின்வாரிய அலுவலகத்தின் வரவு- செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது, ரூ.2 கோடியே 80 லட்சம் வரை கணேசன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கணேசனுக்கு கணக்கு பிரிவில் பணிபுரிந்தவர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
பிடிபட்டது எப்படி?
கணேசன் பிடிபட்டதுஎப்படி? என்பது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது:-
மத்தூர் கிராம பிரிவு வருவாய் மேற்பார்வையாளர் கணேசன், நாள்தோறும்  வசூலாகும் பணத்திற்கு போலி முத்திரையுடன் வங்கி ரசீது தயாரித்து அதை கணக்கு பிரிவினர் மூலம் வேலூர், சென்னை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வந்துள்ளார். இதற்காக கணக்கு பிரிவில் கணேசனுக்கு துணையாக இருந்தவர்கள், மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் இருப்பதற்கும் லஞ்சமும் கொடுத்துவந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசனுக்கு உதவி புரிந்த கணக்கு பிரிவு அலுவலர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர். அப்போது புதிய நபர் பணியில் பொறுப்பேற்றுள்ளார். அவர் வருவாய் கணக்குகளை சரிபார்க்கும் போது வங்கிக்கு அனுப்பி உள்ள பண பரிவர்த்தனை விவரங்களையும், கணேசன் தரப்பு கொடுத்த ரசீதையும் ஒப்பிடும் போது பணம் கையாடல் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ரூ.1 கோடி அளவில் பணம் கையாடல்நடந்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள்கூறினர்.
போலீசில் புகார்
கணேசனிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கணேசன் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனு விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மின்வாரிய அலுவலகத்தில் கோடிக்கணக்கில் கையாடல் நடந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story