தஞ்சாவூர் பகுதியிலிருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு விற்பனை


தஞ்சாவூர் பகுதியிலிருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு விற்பனை
x
தினத்தந்தி 11 Jun 2021 3:27 AM IST (Updated: 11 Jun 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் உலர் தீவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தஞ்சாவூர் பகுதியிலிருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் உலர் தீவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தஞ்சாவூர் பகுதியிலிருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
பருவம் தவறிய மழை
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதுதவிர இதன் உப தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். கால்நடை வளர்ப்பைப் பொறுத்தவரை தீவனத்துக்கென பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம் மட்டுமல்லாமல் உலர் தீவனமும் கொடுக்க வேண்டியதுள்ளது.
இதற்கென அறுவடை சமயத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை இருப்பு வைத்துப் பயன்படுத்துவர். நடப்பு ஆண்டில் பருவம் தவறிப் பெய்த மழையால் சோளத்தட்டை மற்றும் வைக்கோல் போன்றவை மழையில் நனைந்து பெருமளவு வீணாகி விட்டது. எனவே அதிக அளவில் இருப்பு வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது உலர் தீவனத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் கால்நடை வளர்ப்போர் வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது.
தேவைக்கு அதிகமாக உற்பத்தி
உடுமலையையடுத்த கல்லாபுரம், எலையமுத்தூர் பகுதிகளில் ஒருசில இடங்களில் தற்போது நெல் அறுவடை நடைபெற்றுள்ள போதும் பல இடங்களில் மழையால் நெற்கதிர்கள் மண்ணில் சாய்ந்துள்ளன.இதனால் நடப்பு ஆண்டிலும் போதிய அளவில் வைக்கோல் கிடைப்பது சிரமமானதாகவே இருக்கும். எனவே சிலர் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வைக்கோலை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு வந்து உடுமலை பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. அங்கு தேவைக்கு அதிகமாகவே வைக்கோல் உற்பத்தி நடைபெறுகிறது. எனவே அங்கிருந்து அதிக அளவில் வைக்கோல் வெளியூர் வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்படுகிறது. அந்த பகுதிகளில் நெற்கதிர்களை அறுவடை செய்து நெல் மணிகளை உதிர்த்த பிறகு கிடைக்கும் வைக்கோலை 3 வகையாக தரம் பிரிக்கிறார்கள்.
முதல் தர வைக்கோல்
நன்கு காய்ந்து வெள்ளை நிறத்திலிருக்கும் வைக்கோல் எந்திரங்கள் மூலம் கட்டுகளாகக் கட்டப்பட்டு மாட்டுத் தீவனத்துக்காக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர பழுப்பு நிறத்திலிருக்கும் 2 ம் ரக வைக்கோல் காளான் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வாங்கிச் செல்லப்படுகிறது. இதுதவிர உதிரியாகக் கிடைக்கும் வைக்கோல் பீங்கான் மற்றும் கண்ணாடிப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு உடையாமல் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்துவதற்காக வாங்கிச் செல்லப்படுகிறது. நாங்கள் முதல் தர வைக்கோலை வாங்கி வந்து தற்போது ஒரு கட்டு ரூ.280 வரை விற்பனை செய்கிறோம். பொதுவாக உள்ளூர் வைக்கோல் வரத்தைப் பொறுத்து ஒரு கட்டு குறைந்த பட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனையாகும். தற்போது 4 அடி நீளக் கட்டுகளை இந்த விலைக்கு விற்று வருகிறோம். இதுவே 3 அடி நீளக் கட்டுகள் என்றால் சற்று விலை குறைவாக விற்பனை செய்ய முடியும்'.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story