லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.39½ லட்சம் பறிமுதல்


லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.39½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2021 3:45 AM IST (Updated: 11 Jun 2021 3:45 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.39½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்
தாராபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.39½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிமெண்டு பாரம்
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 54) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் இருந்து லாரியில் கரூர் நோக்கி வந்தார். பின்னர் புலியூர் அருகே இருந்து 30 டன் சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு மீண்டும் கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக ராகவன் லாரியை ஒட்டி வந்தார். தாராபுரம் அருகே பொள்ளாச்சி ரோட்டில் உள்ள காட்டன் மில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடி அருகே வந்த போது லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையோரம் லாரி நிற்பதை பார்த்தனர். 
ரூ.39½ லட்சம் 
இதனால் லாரி டிரைவரை தட்டி எழுப்பி லாரியை ஏன் இங்கே நிறுத்தி இருக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அப்போது லாரி டிரைவர் ராகவன் தூக்கம் வந்ததால் லாரியை நிறுத்தியிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை நடத்தினர்.
அப்போது லாரியின் முன்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை இருந்ததை பார்த்தனர். இதை பிரித்து பார்த்த போது அதில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டுகட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் ரூ.39 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது. 
இதுகுறித்து கேட்டபோது லாரி டிரைவர்  முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். எனவே ரோந்து போலீசார் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பரண்டு ஞானரவி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
டிரைவர் கைது
பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு லாரி டிரைவர் ராகவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கரூரில் உள்ள அன்சாரி என்பவர் கோழிக்கோட்டில் உள்ள தனது தந்தை அன்வரிடம் இந்த பணத்தை கொடுத்துவிடும்படி கூறியதாகவும், அப்படி கொடுத்தால் எதாவது கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்து வாங்கி வந்ததாகவும் ராகவன் கூறினார். 
இதையடுத்து அன்சாரியின் செல்போன் எண்ணை பெற்று போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று நினைத்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருவாய்த்துறையினர் இந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story