தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு ரூ.30 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்துக்கு 87 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு 30 நோயாளிகளுக்கு வழங்க முடியும்.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது.
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். தடுப்பூசி இறக்குமதிக்கோ, உற்பத்திக்கோ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
செங்கல்பட்டு அல்லது குன்னூரில் உள்ள 113 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தடுப்பூசி தொழிற்சாலைகளில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதித்தால் மாநில அரசு உற்பத்தியை தொடங்கும். ஆனால் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story