மாவட்ட செய்திகள்

காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள்: படகு கவிழ்ந்து கடலில் உயிருக்கு போராடிய 5 மீனவர்கள் + "||" + From Kasimed Those who went fishing The boat capsized Fought for life at sea 5 fishermen

காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள்: படகு கவிழ்ந்து கடலில் உயிருக்கு போராடிய 5 மீனவர்கள்

காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள்: படகு கவிழ்ந்து கடலில் உயிருக்கு போராடிய 5 மீனவர்கள்
காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள், ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததால் கடலில் உயிருக்கு போராடினர். 11 மணி நேரத்துக்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிப்பதற்காக ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சார்லஸ் (வயது 41), காந்தி (47), ஜானி (40), வேல்முருகன் (44), பொன்னுசாமி (60) ஆகிய 5 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கோவளத்தில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிந்தபோது, ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்து நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்த மீனவர்கள் 5 பேரும் படகு மற்றும் கேனை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதைபார்த்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இதுபற்றி காசிமேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ. எபினேசருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவரது மேற்பார்வையில் மீனவ சங்கத்தினர் இரட்டை என்ஜின் கொண்ட 4 பைபர் படகுகளில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க புறப்பட்டு சென்றனர்.

நேற்று காலை 11 மணியளவில் கோவளத்துக்கு அருகே 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் சுமார் 11 மணிநேரமாக கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். கரைக்கு திரும்பி அவர்களை எபினேசர் எம்.எல்.ஏ., அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி ஆகியோர் நலம் விசாரித்து தேவையான உதவிகளை வழங்கினர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக தண்டையார்பேட்டையில் உள்ள சின்ன ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.