மயிலாடுதுறையில், துணிகரம்: போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலைவீச்சு


மயிலாடுதுறையில், துணிகரம்: போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2021 9:49 AM GMT (Updated: 11 Jun 2021 9:49 AM GMT)

மயிலாடுதுறை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

மயிலாடுதுறை,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் கோடீஸ்வரன்(வயது 29). போலீஸ்காரரான இவர், மயிலாடுதுறை போலீஸ் நிலைய தொழில் நுட்ப அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு வந்தார். போலீஸ் நிலைய அலுவலக வளாகத்தில் கோடீஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்று தனது பணியில் ஈடுபட்டு இருந்தார்.

பணி முடிந்து கோடீஸ்வரன் தனது வீட்டுக்கு செல்வதற்காக போலீஸ் நிலையத்தின் உள்ளே இருந்து வெளியில் வந்தார். தான் நிறுத்தி வைத்து இருந்த இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை காணாமல் போனதை கண்டு கோடீஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

தனது மோட்டார் சைக்கிளை வேறு எங்கேயேனும் நிறுத்தி வைத்து இருக்கிறார்களா? என்று போலீஸ்காரர் கோடீஸ்வரன், போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தார். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. அந்த மோட்டார் சைக்கிள் மாயமான விவரம் தெரியாமல் அவர் சிறிது நேரம் குழம்பி போனார்.

பின்னர் அவர் தான் பணிபுரியும் போலீஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை போலீஸ் நிலைய வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் தொழில் நுட்ப அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. இத்தகைய பாதுகாப்பு நிறைந்த வளாகத்தில் அதுவும் ஒரு போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருட்டு போனது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆள் இல்லாத வீடுகள், மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேர்வு செய்து மர்ம நபர்கள், தங்கள் கைவரிசையை காட்டுவது வழக்கமாக நடந்து வருகிறது.

ஆனால் பகல், இரவு என 24 மணி நேரமும் இயங்கும் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் பட்டப்பகலில் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளையே திருடிச்செல்வது என்றால் நிச்சயம் அதற்கு ஒரு ‘தில்’ வேண்டும். இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் யாராக இருக்கும் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story