கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 நாட்களில் 20 பத்திரங்களே பதிவானது
சாதாரண நாட்களில் தினமும் 25 பத்திரங்கள் பதிவான நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 நாட்களில் 20 பத்திரங்களே பதிவானது.
நாகப்பட்டினம்,
தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்தபடியாக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பத்திரப்பதிவுத்துறை உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களும் மூடப்பட்டன.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வு அளிக்கப்பட்டது. இதில் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தினமும் 50 சதவீத டோக்கன் முறையில் பத்திரப்பதிவு செய்ய தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
கொரோனா நோய் தொற்றின் அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்கள் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக நாகை தாசில்தார் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணை சார்பதிவாளர் அலுவலகம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு கடந்த 4 நாட்களில் மட்டும் 20 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
நாகை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சாதாரண நாட்களில் தினமும் 25-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது என பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story