முன்விரோதத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு


முன்விரோதத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2021 6:07 PM IST (Updated: 11 Jun 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

முன்விரோதத்தில் விவசாயியை அரிவாளால் வெட்டிய அண்ணன்- தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்பூபதி (வயது 34). விவசாயி. இவருடைய மனைவி சுதா (33). இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யாபிள்ளை மகன் கேசவன். இவருடைய சகோதரர் சவுந்தரராஜன். அருள்பூபதி குடும்பத்தினருக்கும், கேசவன் குடும்பத்தினருக்கும் இடையே வேலி பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கொல்லையை கூட்டி சுத்தப்படுத்திய சுதா, குப்பைகளை கேசவன் வீட்டு கொல்லை பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் கேசவன் தரப்பினருக்கும், அருள்பூபதி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது கேசவனும், சவுந்தரராஜனும் சேர்ந்து அருள்பூபதி மற்றும் சுதா ஆகியோரை தாக்கி, அருள்பூபதியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருள்பூபதி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அருள்பூபதி கொடுத்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேசவன், சவுந்தரராஜன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story