உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் - நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், செம்பனார்கோவில், கொள்ளிடம், சீர்காழி ஆகிய வட்டாரங்களில் உள்ள அனைத்து தனியார் உர மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் பேசுகையில், உரங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. தற்போது அரசு நிர்ணயித்த விலைக்கு விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு பி.ஒ.எஸ். எந்திரம் மூலம் பில் கொடுக்க வேண்டும்.
மேலும் விலைப்பட்டியல் கடைகளின் முன்பு வைக்க வேண்டும் அதில் வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் தொலைபேசி எண்கள் குறிப்பிட வேண்டும். உரங்களை விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், கொள்ளிடம் உதவி அலுவலர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழரசன், ராமன், கிடங்கு மேலாளர்கள் சரவணன், பாலமுரளி, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சின்னண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story