தஞ்சை அருகே, வெளியே சுற்றித்திரிந்த கொரோனா நோயாளி மீது வழக்கு - ஆய்வின் போது வீட்டில் இல்லாததால் துணை கலெக்டர் நடவடிக்கை
தஞ்சை அருகே துணை கலெக்டர் ஆய்வின்போது வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்த கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வல்லம்,
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது வாலிபருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த மே 30-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் 3-ந்தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டு, நாளை(சனிக்கிழமை) வரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் தொலைபேசியில் அந்த வாலிபரிடம் உடல் நலம் விசாரித்த போதும், அவர் வெளியே சுற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று காலை தஞ்சை பயிற்சி துணை கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன், நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் திடீரென வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என வல்லுண்டாம்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே சுற்றியுள்ளார்.
அவரது வீட்டில் வெகுநேரம் காத்திருந்த அதிகாரிகள் அவரை செல்போன் மூலம் எச்சரித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாலிபர் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல், பலருக்கும் தொற்றை பரப்பும் வகையில் வெளியே சுற்றி வருகிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story