கீழ்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர்: ரெயில் மோதி முதியவர் பலி - தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்


கீழ்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர்: ரெயில் மோதி முதியவர் பலி - தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 11 Jun 2021 3:13 PM GMT (Updated: 11 Jun 2021 3:13 PM GMT)

கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி முதியவர் பலியானார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சிவாஜிநகர் சீத்தாநகரை சேர்ந்தவர் ஜான்சன் (வயது73). இவர் நேற்றுகாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்டார். சிவாஜிநகர் ரெயில்வே கீழ்பாலம் வழியாக செல்ல முயற்சி செய்தார். ஆனால் கீழ்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக ஜான்சனால் செல்ல முடியவில்லை. இதனால் அவர், ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முடிவு செய்தார். அதன்படி ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தபோது திருச்சி நோக்கி சென்ற ரெயில், ஜான்சன் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவர், பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், ஜான்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கும் தண்ணீர் உடனடியாக வடிந்து செல்வதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் கீழ்பாலத்தின் வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் உயிரை பணயம் வைத்து கொண்டு ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் உடனடியாக வடிவதற்கு ஏற்ப வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Next Story