மனநலம் பாதித்தவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்


மனநலம் பாதித்தவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 11 Jun 2021 8:47 PM IST (Updated: 11 Jun 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதித்தவரை இளைஞர்கள் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்:
இளைஞர்கள் சிலர் சேர்ந்து பசியில்லா வடமதுரை எனும் அமைப்பை தொடங்கி ஆதரவற்றோர், மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே ம.மு.கோவிலூர் பிரிவு பகுதியில் சிலருக்கு, அந்த இளைஞர்கள் உணவு வழங்கினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது ஆண் சுற்றித்திரிவதை பார்த்தனர். இதையடுத்து அவருக்கு புதிய ஆடை அணிவித்து உணவு வழங்கியதோடு, அவரை புகைப்படம் எடுத்து தங்களுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டனர். மேலும் தங்களுடைய நண்பர்களை ‘ஷேர்’ செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதையடுத்து 900 பேர் ‘ஷேர்’ செய்தனர். அதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள அகிலாண்டகங்கைபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பது தெரியவந்தது.
மெக்கானிக்கல் டிப்ளமோ படித்துள்ள தமிழ்செல்வனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட அவர், வீட்டை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை மீட்ட இளைஞர்கள், அவரை காரில் கடலூருக்கு அழைத்து சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.7 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்செல்வனை பார்த்த அவருடைய குடும்பத்தினர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.


Next Story