மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேர் கைது


மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 9:32 PM IST (Updated: 11 Jun 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சையது உலாம் தஸ்தாகிர், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர். அதேபோல் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது டி.எல்.1 பெட்டியில் உள்ள இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 2 பைகளை ரெயில்வே போலீசார் கைப்பற்றினர். அதில் 46 மதுபான பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பெட்டியில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில்தெருவை சேர்ந்த பாஸ்கரன் (வயது 52) என்பதும், மைசூருவில் இருந்து மதுபானம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். 
அதேபோல் டி2 பெட்டியில் இருக்கைக்கு அடியில் இருந்த ஒரு பையை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அதில் 20 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பெட்டியில் இருந்த 2 பேரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் திண்டுக்கல் பிலாத்து பகுதியை சேர்ந்த சந்திரமோகன் (30), பட்டிவீரன்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (24) என்பதும், மைசூருவில் இருந்து மதுபானத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story