திண்டுக்கல்லில் பாதுகாப்பு கேட்டு 3 காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


திண்டுக்கல்லில் பாதுகாப்பு கேட்டு 3 காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 11 Jun 2021 9:35 PM IST (Updated: 11 Jun 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பாதுகாப்பு கேட்டு 3 காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் ராஜ்கோகுல் (வயது 22). திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாடிக்கொம்புவை சேர்ந்தவர் பிரமிளா (23). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். இறுதியாண்டு படித்து வருகிறார். 
பிரமிளா பஸ்சில் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரிக்கு வந்து செல்வாராம். அப்போது அதே பஸ்சில் திண்டுக்கல்லுக்கு வேலைக்கு வந்து சென்ற ராஜ்கோகுலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர். இதற்கிடையே இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். 
பின்னர் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். 
அதேபோல் மேலும் 2 காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதும் காதல் ஜோடிகளின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டு தங்களுடன் அழைத்துச்சென்றனர்.

Next Story