மண் பரிசோதனைக்குபின் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறலாம்


மண் பரிசோதனைக்குபின் பயிர் சாகுபடியில்  உயர் விளைச்சல் பெறலாம்
x
தினத்தந்தி 11 Jun 2021 4:20 PM GMT (Updated: 11 Jun 2021 4:20 PM GMT)

மண் பரிசோதனைக்குபின் பயிர் சாகுபடி செய்தால் உயர் விளைச்சல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சாயல்குடி, 
மண் பரிசோதனைக்குபின் பயிர் சாகுபடி செய்தால் உயர் விளைச்சல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மண் பரிசோதனை
மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து கடலாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி கூறியதாவது:- மண்ணின் தன்மை மற்றும் மண்ணில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் பயிர் செய்யும்போது தான் ஏற்ற விளைச்சல் பெற முடியும். 
எனவே மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் குறைபாடுகளை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை உரிய நேரத்தில் அளிப்பதன் மூலமும் வேதி செயல்பாடுகள் மூலம் மண்ணில் உருவாகும். களர், உவர், தன்மை சார்ந்த குறைபாடு களை சரி செய்வதன் மூலமும் பயிர் செய்யும் பயிரின் மூலம் உயர் விளைச்சல் பெற முடியும். 
விவசாயிகள் மண் பரிசோதனைக்கு தேவைப்படும் மண் மாதிரியை அறுவடைக்கு பின்னரும் கோடைப் பருவத்திலும் எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் ஆங்கில எழுத்து, வி வடிவில் பயிர்களுக்கு ஏற்ப ½ அடி முதல் ¾ அடி ஆழம் வரை குழியெடுத்து பக்கவாட்டில் மேல் இருந்து கீழாக சுரண்டி மண் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். மேலும் வரப்பு ஓரங்கள் நிழல்படும் இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்கள் உரமிட்ட இடங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கக் கூடாது.
ஆய்வு
 இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை கால் பங்கிட்டு முறையில் ½ கிலோ மண் வரும்வரை செய்ய வேண்டும் பின்பு சேகரித்த மண் பரிசோதனைக்காக பரமக்குடியில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் ஒரு மண் மாதிரி ரூ. 20 ஆய்வுக்கட்டணம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மண் ஆய்விற்கு பிறகு மண்ணின் உப்புத் தன்மை அமிலகார நிலை பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்கள் விவரம் நடப்பு பயிருக்கு வழங்க வேண்டிய உர அளவு மண்ணின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய விவரங்களுடன் கூடிய மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
 மேலும் மண் பரிசோதனை படி உரம் இடுவதால் உரச் செலவு குறைவதுடன் மண்ணின் வளமும் காக்கப்பட்டு உயர் விளைச்சல் பெற ஏதுவாக அமைகிறது மற்றும் பயிர் சாகுபடி உற்பத்தி செலவினை கணிசமான அளவில் குறைக்கலாம். மண் பரிசோதனை குறித்த விவரங்கள் தேவைப்படும் விவசாயிகள் கடலாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்அடையலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story