பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முள்வேலியிட்டு அடைத்த முதியவர்


பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முள்வேலியிட்டு அடைத்த முதியவர்
x
தினத்தந்தி 11 Jun 2021 4:22 PM GMT (Updated: 11 Jun 2021 4:22 PM GMT)

வயதான காலத்தில் தன்னை மகன் பராமரிக்காததால் ஆத்திரம் அடைந்த முதியவர் தனது மகனுக்கு வழங்கிய இடத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முள்வேலியிட்டு அடைத்தார். அந்த வேலியை அகற்ற முயன்றபோது அவர் தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிக்கல்:
வயதான காலத்தில் தன்னை மகன் பராமரிக்காததால் ஆத்திரம் அடைந்த முதியவர் தனது மகனுக்கு வழங்கிய இடத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முள்வேலியிட்டு அடைத்தார். அந்த வேலியை அகற்ற முயன்றபோது அவர் தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- 

தானமாக வழங்கினார்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா தேவூர்-கச்சனம் சாலையில் வசித்து வருபவர் ரெத்தினவேல்(வயது 70). இவர், தனது இரண்டாவது மகன் ஆனந்த் (40) என்பவருக்கு கச்சனம் சாலையில் உள்ள தனது இடத்தை தானமாக கொடுத்தார். அந்த இடத்தில் ஆனந்த் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் வயதான தன்னை கவனித்துக்கொள்ளுமாறு மகன் ஆனந்திடம், ரெத்தினவேல் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே தனது மகன் ஆனந்துக்கு தானமாக செட்டில்மெண்ட் செய்து கொடுத்த இடத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு அப்போதைய நாகை கோட்டாட்சியர் பழனிகுமாரிடம் ரெத்தினவேல் மனு அளித்தார்.

முள்வேலி 

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி பெற்றோர்- முதியோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்ட விதிகளின்படி ரத்தினவேல் தனது மகன் ஆனந்துக்கு பெட்ரோல் விற்பனை நிலையம் வைக்க வழங்கிய இடத்தின் தான செட்டில்மெண்டை கோட்டாட்சியர் பழனிகுமார் ரத்து செய்து உத்தரவிட்டார்.
கோட்டாட்சியர் உத்தரவுப்படி ஆனந்த் அந்த இடத்தை திருப்பி தராததால் ரெத்தினவேல் கடந்த மே 21-ந் தேதி பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முள்வேலி வைத்து அடைத்து விட்டார். 

வேலியை அகற்ற முயற்சி

இதனைத்தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து கீழ்வேளூர் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் முன்பும் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை கோட்டாட்சியர், அத்தியாவசிய பொருட்கள் விதிகளின்படி பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்குவதற்கு அனுமதி அளித்தார். அதன்பேரில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை தாசில்தார் மாரிமுத்து தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அகற்ற முயன்றனர். 
 
தர்ணா போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த ரெத்தினவேல் தனது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோருடன் அங்கு வந்து முள்வேலியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இரு தரப்பினருடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்முடிவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை நடத்தாமல் பூட்ட வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முள்வேலி அகற்றப்பட்டது. பின்னர் ரெத்தினவேல் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story