தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற வெளிநாட்டுக்காரர் கைது


தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற வெளிநாட்டுக்காரர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 10:20 PM IST (Updated: 11 Jun 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டுக்காரர்
தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் வெளிநாட்டுகாரர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வில்லியம்பெஞ்சமின், செல்வக்குமார், ஜீவமணி தர்மராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 
அங்கு சுற்றிக்கொண்டு இருந்தவரை மடக்கிப்பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர், இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்து இருந்தது தெரியவந்தது.
இலங்கைக்கு...
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அவரது பெயர் ஜோனாதன் தோர்ன் (வயது 47). அவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். அவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருவுக்கு வந்து உள்ளார். அங்கிருந்து வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு கடந்த 9-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார்.
இங்கு பிரபல ஓட்டலில் தங்கி இருந்தார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். இதற்காக கடற்கரையில் நின்றபோது அவர் பிடிபட்டது தெரியவந்து உள்ளது. 
கைது
கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டு உள்ளார். 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஜெயிலில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்து உள்ளார். அவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், ஜோனாதன் தோர்ன் மீது சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனை
இதையடுத்து அவரை போலீசார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஜோனாதன் தோர்னுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவரை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜகுமரேசன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story