பந்தலூரில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
பந்தலூரில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(வயது 40), யோகேஸ்வரன்(35) ஆகிய 2 பேர் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லிட்டர் சாராயம் மற்றும் 11 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கோத்தகிரி அருகே செம்மனாரையில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குஜ்ஜன்(36) என்பவர் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 60 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story