தர்மபுரி மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் விற்ற 17 பேர் கைது-கடத்திய 5 பேர் சிக்கினர்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் விற்ற 17 பேர் கைது-கடத்திய 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:53 PM IST (Updated: 11 Jun 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் விற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள்களில் மது கடத்திய 5 பேரும் சிக்கினர்.

தர்மபுரி:
போலீசார் சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் சோதனை செய்தனர். 
அப்போது தர்மபுரியில் சின்னசாமி (வயது 34), தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த அருள் (32) உள்பட 13 பேர் வீடுகளில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 915 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏரியூர்
இதேபோன்று ஏரியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீலநாயக்கனூரை சேர்ந்த பச்சமுத்து (35), சின்னப்பநல்லூரை சேர்ந்த பழனி (34), சிடுவம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (27), காளியப்பன் (45) ஆகியோர் கர்நாடக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் காவிரி ஆற்றை கடந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த மேச்சேரி அருகே உள்ள கூத்தனூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30), ஆனந்தன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம் 
காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், செல்வராஜ், சபி மற்றும் போலீசார் நேற்று காரிமங்கலம் அருகே குண்டலஅள்ளி பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுபாக்கெட்டு்கள் இருப்பது தெரிந்தது. 
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தர்மபுரி அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (21) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 187 மதுபாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம்
பென்னாகரம் போலீசார் போடூர் பிரிவு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செக்குமேடு பகுதியை சேர்ந்த அருள் (32), அஜ்ஜனஅள்ளியை சேர்ந்த அதிபதி (42) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story