காவேரிப்பட்டணத்தில் கூழ் வியாபாரி அடித்துக்கொலை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


காவேரிப்பட்டணத்தில் கூழ் வியாபாரி அடித்துக்கொலை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2021 10:55 PM IST (Updated: 11 Jun 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் கூழ் வியாபாரி அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்:
கூழ் வியாபாரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கூரம்பட்டி பக்கமுள்ள தேனோடை நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூழ் வியாபாரி. இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது மனைவியை விவகாரத்து செய்து விட்டு முனியம்மாள் (30) என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். ராஜேந்திரன் தினமும் வீட்டில் கூழ் தயாரித்து அதை மோட்டார் சைக்கிள் மூலம் காவேரிப்பட்டணம் கொண்டு வந்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
மர்ம நபர்கள் தாக்குதல்
நேற்று அதிகாலை ராஜேந்திரன் வழக்கம்போல் கூழ் தயாரித்து அதனை தனது மோட்டார்சைக்கிளில் வைத்து காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வேங்கை நகர் அருகில் அதிகாலை 5.30 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் திடீரென வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கட்டையால் ராஜேந்திரனின் தலையில் பயங்கரமாக தாக்கினார்கள்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் ராஜேந்திரன் காயங்களுடன் கிடந்ததை பார்த்து அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரபரப்பு
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை அடித்துக்கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். காவேரிப்பட்டணத்தில் கூழ் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story