கொரோனா தடுப்பூசியை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்


கொரோனா தடுப்பூசியை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்
x
தினத்தந்தி 11 Jun 2021 6:04 PM GMT (Updated: 11 Jun 2021 6:04 PM GMT)

பேச்சிப்பாறை அருகே மலைவாழ் மக்கள் தடுப்பூசியை புறக்கணித்து வரும் நிலையில் அந்த பகுதியில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே மலைவாழ் மக்கள் தடுப்பூசியை புறக்கணித்து வரும் நிலையில் அந்த பகுதியில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
மலையோர கிராமங்கள்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் மலையோர பகுதிகளான பேச்சிப்பாறையை அடுத்த கோதையாறு, குற்றியாறு, தச்சமலை, மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்தினர். பெரும்பாலான மக்கள் தடுப்பூசியை புறக்கணித்தனர்.
இதையடுத்து மலைவாழ் மக்களிடையே தடுப்பூசி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிடவும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மலையோர கிராமங்களுக்கு சென்றார். அவர் மூக்கறைக்கல், மோதிரமலை, மாங்காமலை, குற்றியாறு, முடவன்பொற்றை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார், 
அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும்,  மலைவாழ் மக்களிடம், தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
40 பேருக்கு தொற்று
தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
மலையோர பகுதிகளில் சுகாதாரத்துறையுடன் தன்னார்வலர்கள், தனியார் சமூக அமைப்புகள் இணைந்து வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டு நோய்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக 40 பேருக்கு தொற்று  கண்டறிபயப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
மலைவாழ் மக்களிடையே தடுப்பூசி போடுவது குறித்த அச்சத்தை போக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. தடுப்பூசிகள் வந்தவுடன் முதற்கட்டமாக மலைவாழ்மக்களுக்கு முகாம்கள் அமைத்து 500 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கபடும். மழைக்காலம் முடிந்தவுடன் மலையோரப்பகுதி சாலைகள் செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளபடும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுருபிரபாகரன், சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story