திருச்சி மாவட்டத்தில் மீண்டும் பலி அதிகரிப்பு: கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மீண்டும் பலி அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மீண்டும் பலி அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிதாக 439 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 439 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 64,220 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 6,534 பேர் உள்ளனர். 1,114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 56,428 ஆகும்.
20 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு, பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 20 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 7 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள் ஆவர்.
இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 744 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒருநாள் பலி 8 ஆக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பலி அதிகரித்து ஒரே நாளில் 20 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
1,707 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் 558, சாதாரண படுக்கைகள் 1,065 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 84 என மொத்தம் 1,707 படுக்கைகள் காலியாக உள்ளன.
Related Tags :
Next Story