எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை


எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 12 Jun 2021 12:28 AM IST (Updated: 12 Jun 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 6 யானைகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


சமயபுரம்,
சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 6 யானைகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வன விலங்குகளுக்கு கொரோனா

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கடந்த 5-ந்தேதி உயிரிழந்தது. மேலும் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பூங்காக்கள், காப்பகங்களில் இருக்கக்கூடிய வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதனைத்தொடர்ந்து முதுமலைபுலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்புயானை முகாமில் 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

6 யானைகளுக்கு பரிசோதனை

இந்தநிலையில், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மலாச்சி, சந்தியா, இந்து, ஜெயந்தி, கோமதி, ஜமீலா உள்ளிட்ட 6 யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.

இதற்காக நேற்று கோவையில் இருந்து கால்நடை சிறப்பு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்பகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அங்கு பராமரிக்கப்பட்டு வரும் 6 யானைகளிடம் இருந்து சளி மற்றும் சாணம் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்தனர்.

பாகன்கள், வன அலுவலர்கள்

அவை கொரோனா பரிசோதனைக்காக உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், அதனுடைய முடிவு வரும் திங்கட்கிழமை அன்று கிடைக்கப்பெறும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் யானை தாவர உண்ணிகள் வகையைச்சேர்ந்தது என்பதால் பெரும்பாலும் கொரோனா வைரஸ் தாக்காது என்றும் கூறினர்.

இதைத்தொடர்ந்து, இந்த காப்பகத்தில் உள்ள 9 பாகன்கள், 10 வனஅலுவலர்கள் ஆகியோர்களுக்கு சிறுகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையின் போது திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா, உதவி வனபாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வன அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story