அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்


அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Jun 2021 12:38 AM IST (Updated: 12 Jun 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொள்ளாச்சி

டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோழிகமுத்தி மலைக்கிராமம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது உலாந்தி வனச்சரகம். இந்த வனச்சரக பகுதியில் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு மற்றும் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு 130 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 
மேலும் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் வளர்ப்பு மற்றும் கும்கி யானைகளை பராமரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மலைவாழ் மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

மேலும் குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே  தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

கான்கிரீட் வீடுகள்

கோழிகமுத்தியில் மலைவாழ் மக்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. நீண்ட காலம் ஆவதால் வீடுகள் பழுதடைந்து காணப்படுகிறது. 

இதற்கிடையில் காற்று வீசும் போது சில நேரங்களில் மேற்கூரைகள் பறந்து விடுகின்றன. மழைக்காலங்களில் ஒழுகுவதால் தூங்க முடியவில்லை. 
கழிப்பிட வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். 

மின்சார வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மண்ணெண்னை விளக்கு வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றோம்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. தற்போது டாப்சிலிப்பிற்கு வந்த வனத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்து உள்ளோம். 

வீடுகளுக்கு மேல் தகரத்தில் மேற்கூரை அமைப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் விழும் போது சத்தம் அதிகமாக கேட்கிறது. 

எனவே புதிதாக கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கவும், கோழிகமுத்தி மலைக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story