கொரோனா 3-வது அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்; அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


கொரோனா 3-வது அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்; அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2021 12:55 AM IST (Updated: 12 Jun 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 3-வது அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நெல்லை:
கொரோனா 3-வது அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கொரோனா சிகிச்சை மையம்

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா 2-வது அலையால் அதிகளவு வந்த கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சைக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பது தவிர்க்கப்பட்டு, கொரோனா நோயாளிகள் எளிதாக நோய் பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப ஆஸ்பத்திரி, சிகிச்சை மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது கொரோனா 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் 3-வது அலை ஏற்பட்டால் அதனையும் எதிர்கொள்ளும் வகையில் காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மேலும் 180 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் குழந்தைகளுக்கான அனைத்து சிறப்பு வசதிகளுடன் 20 படுக்கைகளும், 10 ‘‘ஜீரோ டிலே’’ படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 75 படுக்கைகளும் அடங்கும். 

அமைச்சர் திறந்து வைத்தார்

இந்த சிறப்பு மைய திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 240 ஆக குறைந்து விட்டது. காந்திமதி அம்பாள் பள்ளியில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 415 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 980 படுக்கை வசதி கொண்ட மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 711 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 

தடுப்பூசி

நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என 13 லட்சத்து 19 ஆயிரத்து 234 பேர் உள்ளனர். இதில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை கேட்டு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டத்துக்கு ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு கூடங்குளத்தில் 720 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் மையம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரில் 2 ஆயிரத்து 400 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. கங்கைகொண்டான் சிப்காட் மையத்தில் இயங்காமல் இருந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கு தேவையான உதவிகளை செய்து அந்த ஆலை இயங்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அந்த ஆக்சிஜன் ஆலை இயங்க தொடங்கினால் 1,680 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 800 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.

3-வது அலையை எதிர்கொள்ள தயார்

கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தொடர்பாக மத்திய அரசின் பதிலை எதிர்பார்த்து உள்ளோம். விரைவில் பதிலை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து அவர் கூறுகையில், ‘‘ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்த மக்கள் குறித்த ஆய்வறிக்கை வராமல் இருக்கிறது. உடனடியாக ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அருங்காட்சியகத்தை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆக்சிஜன் ஆலையில் ஆய்வு

இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பராமரிப்பு பணியையும், சேதுராயன்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணியையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் வரதராஜன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷாராணி, சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் தணிகாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story