சமையல் எண்ணெய் விலை 60 சதவீதம் வரை உயர்வு


சமையல் எண்ணெய் விலை 60 சதவீதம் வரை உயர்வு
x
தினத்தந்தி 12 Jun 2021 1:30 AM IST (Updated: 12 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் சமையல் எண்ணெய் விலை 50 முதல் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

விருதுநகர், 
தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் சமையல் எண்ணெய் விலை 50 முதல் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 ஆய்வு 
மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நான்கு நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது சூரியகாந்தி எண்ணெய் கிலோவிற்கு ரூ. 50 வரையிலும், பாமாயில் கிலோவிற்கு ரூ.47 வரையும் விலை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

விலை அதிகரிப்பு 
அதாவது கடந்த பிப்ரவரி மாதம் இருந்த விலையை விட தற்போது சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலை 50 முதல் 62 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு அதிகாரிகள் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிநாடுகளில் இந்த சமையல் எண்ெணய்களின் விலை அதிகம் உள்ளதால் இறக்குமதி செய்யப்படும் இந்த எண்ணெயின் விலையும் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை குறைத்தால் வெளிநாடுகளில் இந்த எண்ணெய்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
பாமாயில் 
எனவே தான் இதற்கான இறக்குமதி வரியை குறைக்க வில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் தமிழகத்தில் பொது வினியோகத்திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 
மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமிழகத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விலைகளை பற்றி ஆய்வு நடத்தாத நிலையில் இதுகுறித்து சமையல்எண்ணெய் உற்பத்தியாளரும் வியாபார சங்க செயலாளருமான இதயம் முத்துவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நல்லெண்ணெய் கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.215 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.245 ஆக விலை உயர்ந்துள்ளது.
இதேபோன்று கடலை எண்ணெய் கடந்த பிப்ரவரி யில் கிலோ ரூ.170 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரியில் விலை குறைந்ததற்கு காரணம் அப்போது நல்லெண்ணெய் தயாரிப்புக்கான எள் அபரிமிதமாக விளைந்திருந்தது.
மலேசியாவின் கொரோனா பாதிப்பாலும் உற்பத்தி செய்யப்படும் பாமாயில் 50சதவீதம் எரிபொருளுக்கு பயன்படுத்தப்படுவதாலும் பாமாயில் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரி விதிப்பு 
சூரியகாந்தி எண்ணெய் அர்ஜெண்டினா, உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் அங்கு விலை உயர்ந்துள்ளதால் இறக்குமதியாகும் இங்கும் விலை உயர்ந்துள்ளது.
 இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 மத்திய அரசு சமையல் எண்ணெய் விலை உயர்வு குறித்து ஆய்வு நடத்தியுள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலை குறைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் எண்ணெய்களுக்கான வரி விதிப்பு குறைக்கப்பட்டால் அந்த எண்ணெய்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும். எனவே அதுபற்றியும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story