10 ரூபாய் நோட்டால் சிக்கினர்: பக்கத்து வீட்டில் திருடிய கணவன்-மனைவி கைது


10 ரூபாய் நோட்டால் சிக்கினர்: பக்கத்து வீட்டில் திருடிய கணவன்-மனைவி கைது
x

சென்னை பல்லாவரம், 10 ரூபாய் நோட்டால் சிக்கினர்: பக்கத்து வீட்டில் திருடிய கணவன்-மனைவி கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கர் நகர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை (வயது 38). இவர், கடந்த மாதம் தனது தாயார் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வழக்கமாக கொடுக்கும் பிரேமா என்பவர் வீட்டில் இல்லாததால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நந்தினியிடம் கொடுத்து விட்டு சென்றார்.

மறுநாள் வீட்டுக்கு வந்த துரை, பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், 250 கிராம் கொலுசு மற்றும் ரூ.84 ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி மற்றும் அவரது கணவர் உமா சங்கரிடம் விசாரித்தனர். ஆனால் இருவரும் தங்கள் குழந்தைகள் மீது சத்தியம் செய்து தாங்கள் திருடவில்லை என்று கூறினர்.

இதற்கிடையில் திருட்டுப்போன ரூ.84 ஆயிரத்தில் பத்து ரூபாய் நோட்டில் 4,500 என்று எழுதி அதில் தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்திருந்தேன் என போலீசாரிடமும், தனது நண்பர்களிடமும் துரை கூறி இருந்தார்.

இந்தநிலையில் பொழிச்சலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் விற்ற மதுபானத்தை வாங்கிய உமாசங்கர், துரையின் கையெழுத்து இருந்த பத்து ரூபாய் நோட்டை கொடுத்தார். அந்த நோட்டு துரையின் நண்பரிடம் சிக்கியதால் அதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர்.அந்த 10 ரூபாய் நோட்டை காட்டி விசாரித்தபோது நந்தினியும், உமாசங்கரும் துரை வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story