சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு 104 விமானங்கள் இயக்கப்பட்டன


சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு 104 விமானங்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 12 Jun 2021 10:50 AM IST (Updated: 12 Jun 2021 10:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு 21 நகரங்களில் இருந்து 104 விமானங்கள் இயக்கப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதால் அடுத்த சில தினங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலந்தூர், 

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக விமான பயணிகள் பலா் தங்களது வெளியூா் பயணங்களை ரத்து செய்து விட்டனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த பயணிகளுடன் விமான சேவை நடக்கிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் 250-க்கும் மேல் இருந்த விமான சேவை, இ-பாஸ் போன்ற உத்தரவால் பயணிகள் வரத்து குறைந்து ஏப்ரல் மாதத்தில் 204 ஆகவும், மே மாதத்தில் இருந்து மேலும் குறைந்து 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் போன்றவற்றுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லி, ஐதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ஆமதாபாத், கவுகாத்தி, கொச்சி உள்பட 19 நகரங்களுக்கு 51 விமானங்களில் 1,921 பேர் புறப்பட்டு சென்றனர். அதேபோல் 21 நகரங்களில் இருந்து சென்னைக்கு 53 விமானங்களில் 2,153 பேர் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று 104 விமானங்கள் இயக்கப்பட்டன. என்றாலும் பெரும்பாலான விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

டெல்லிக்கு 5 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் 8 விமானங்களாகவும், மதுரைக்கு 2 விமானங்களில் இருந்து 5 விமானங்களாகவும், ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்ட மும்பைக்கு 5 விமானங்களும், கொல்கத்தாவுக்கு 4 விமானங்களும், திருச்சி, தூத்துக்குடி, கோவை, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு தலா 2 விமானங்களும் இயக்கப்பட்டன.

கன்னூர், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து தலா ஒரு விமானம் சென்னைக்கு இயக்கப்பட்டன. கொரோனா 2-வது அலை குறைந்து வருவதால் அடுத்த சில தினங்களில் விமான சேவைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story