கொரட்டூர் பகுதியில் மீண்டும் நூதன சம்பவம்: சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய கும்பல்


கொரட்டூர் பகுதியில் மீண்டும் நூதன சம்பவம்: சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய கும்பல்
x
தினத்தந்தி 12 Jun 2021 5:40 AM GMT (Updated: 12 Jun 2021 5:40 AM GMT)

கொரட்டூர் பகுதியில் சொகுசு காரில் வந்து இறைச்சி கடையில் இருந்த கோழிகளை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை கொரட்டூரை அடுத்த பாடி வள்ளலார் தெருவில் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் பூபாலன். இவர், தனது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள் திருட்டுபோனதாக கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் கோழி இறைச்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலை 5 மணியளவில் சொகுசு கார் ஒன்று அந்த வழியாக செல்கிறது. சிறிது நேரத்தில் திரும்பி வரும் கார், கோழி இறைச்சி கடை முன்பு நிற்கிறது. காரின் பின்பக்க இருக்கையில் சிறுவன் மற்றும் இளம்பெண் அமர்ந்து உள்ளனர்.

லுங்கி மற்றும் சட்டை அணிந்தபடி காரை ஓட்டி வரும் நபர் கீழே இறங்கி சுற்றும் முற்றும், மேலும் கீழுமாக சில நிமிடங்கள் நோட்டமிடுகிறார். கடையின் வெளியே கண்காணிப்பு கேமரா இருப்பதையும், பொதுமக்கள் சிலர் அந்த நேரத்தில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றபடி இருப்பதை கவனிக்கிறார்.

சிறிது நேரத்தில் காரின் பின்புறம் இருந்த பெரிய இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு இறைச்சி கடைக்குள் செல்லும் நபர், கோழிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கூட்டின் பூட்டை உடைத்துவிட்டு மீண்டும் இரும்பு கம்பியை காரில் வந்து வைக்கிறார். அதைதொடர்ந்து இறைச்சி கடை கூண்டில் இருந்த கோழிகளை கொத்து கொத்தாக திருடி காரின் பின்இருக்கையில் போடுகிறார்.

இதற்கு பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் இளம்பெண்ணும், சிறுவனும் உதவி செய்கிறார்கள். இவ்வாறு 3 முறை கோழிகளை திருடும் நபர், பின்னர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய சிறுவன், பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கொரட்டூர் பகுதியில் கை குழந்தையுடன் கணவன்-மனைவிபோல் சொகுசு காரில் வந்து ஒரு வீட்டில் கட்டி வைத்து இருந்த ஆடுகளை திருடிச்சென்றனர்.

அதே கும்பல்தான் இந்த இறைச்சி கடையில் கோழிகளை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி வந்த வழக்கம்மாறி, தற்போது சொகுசு காரில் குடும்பமாக வந்து ஆடு மற்றும் கோழிகளை திருடிச் செல்லும் கும்பலால் கொரட்டூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story