பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு


பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2021 5:45 AM GMT (Updated: 12 Jun 2021 5:45 AM GMT)

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.

சென்னை, 

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சென்னை-மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், டொம்மிங்குப்பம், ஏகாம்பரம்பிள்ளை மற்றும் முனுசாமிபிள்ளை திட்டப்பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பருவ கால மாறுபாட்டினால் சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்து, அதே இடங்களில் மறு கட்டுமானம் செய்து, முன்னர் அக்குடியிருப்பில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

மறுகட்டுமானம் எனஅழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் ஏகாம்பரம்பிள்ளை மற்றும் முனுசாமி பிள்ளை திட்டப்பகுதியில் ரூ.31.26 கோடி மதிப்பீட்டில் 208 வீடுகள் கட்டப்படவுள்ளது. இப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை உடனடியாக துவங்க உத்தரவிட்டார். இப்பகுதியில் அருகாமையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புதாரர்களையும் கணக்கெடுப்பு செய்து அருகில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்புகள் கட்ட உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அறிவுறுத்தினார்.

பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.152 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1,188 குடியிருப்புகளை தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, மேம்பட்ட தரத்தினை உறுதி செய்யவும், கொரோனா பெரும் தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமமான சூழ்நிலையிலும் கட்டுமான பணிகளை காலதாமதம் இல்லாமல், நிர்ணயித்த காலவரம்பிற்குள் பணிகளை முடித்து பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் சீனிவாசபுரம் பகுதி-1 திட்டப்பகுதியில் ரூ.51.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 396 குடியிருப்புகளையும் ஆய்வு செய்து பணிகளை துரிதமாக செயல்படுத்த உத்தரவிட்டார்.

டொம்மிங்குப்பம் திட்டப்பகுதியில் மறுகட்டுமானத்திட்டத்தின் கீழ் ரூ.191.45 கோடி மதிப்பீட்டில் 1,472 குடியிருப்புகள் கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, டொம்மிங்குப்பம் திட்டப்பகுதியில் தற்போதுள்ள சிதலமடைந்த குடியிருப்புகளை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அக்குடியிருப்புகளில் வசிக்கும் ஒதுக்கீடுதாரர்களுக்கு, புதிதாக கட்டப்பட்டுவரும் பட்டினப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான உரிய தீர்வை விரைவில் முடிவு செய்து, அதனை செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

சீனிவாசபுரம் பழைய குடியிருப்புகளை ஆய்வு செய்து, அதே இடங்களில் அமையவுள்ள புதியகுடியிருப்புகள் 5 மாடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு திட்டமிட அறிவுறுத்தினார்கள்.

இந்தஆய்வின் போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, குடிசைப்பகுதி மாற்று வாரிய தலைமைப் பொறியாளர் ராம.சேதுபதி மற்றும் வாரிய பொறியாளர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story