வேளாங்கண்ணி அருகே கோவில் குளத்தில் ஆகாய தாமரை அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


வேளாங்கண்ணி அருகே கோவில் குளத்தில் ஆகாய தாமரை அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 5:27 PM IST (Updated: 12 Jun 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே கோவில் குளத்தில் ஆகாய தாமரை அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் வேப்பஞ்சேரி ஊராட்சி மேலதண்ணிலபாடியில் 2 ஏக்கர் பரப்பளவில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெருமாள் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன். இங்கு வசிப்பவர்கள் இந்த குளத்தில் குளிப்பதற்கும் மற்றும் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளத்தில் சுற்றுவட்டார பகுதியான வேப்பஞ்சேரி, கீழதண்ணிலபாடி, மரைக்கான்கட்டளை, பாலக்குறிச்சி, ஒட்டதட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கோடை காலங்களில் குளிப்பதற்காக வந்து செல்வது வழக்கம்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் உள்ள தண்ணீரை கிராம குடிநீருக்காக கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.. இதனால் குளத்தில் குளிப்பதற்கும் ஆடு, மாடுகள் குளத்திற்குள் இறங்கவும் அனுமதிக்கப்படாமல் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வந்த குளத்தில் ஆகாய தாமரை மண்டி புதர் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கிராம மக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாய தாமரை செடிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளதால் குளத்துக்கள் இறங்கவே அச்சமடைக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே 30 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்த குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆகாய தாமரையை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story