தேனி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பிரவீன் உமேஷ் டோங்கரே பொறுப்பேற்பு
தேனி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் ேடாங்கரே தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் ேடாங்கரே தெரிவித்தார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சாய்சரண் தேஜஸ்வி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழக கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரவீன் உமேஷ் ேடாங்கரே தேனி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் இதுவரை 14 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றி உள்ளனர். 15-வது போலீஸ் சூப்பிரண்டாக பிரவீன் உமேஷ் ேடாங்கரே நேற்று பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் ேடாங்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
நான் மராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்தேன். கடந்த 2016-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானேன். முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பயிற்சி பெற்றேன். பின்னர், திருச்சி மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். அங்கிருந்து பதவி உயர்வு பெற்று தமிழக கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினேன்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவாக முதல் முறையாக எனது பணியை தேனியில் தொடங்கி இருக்கிறேன். தேனி பசுமையான, இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அமைதியான சூழலில் வாழவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும். இதுபோன்ற குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் தண்டனை வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த மாதிரியான குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது என்பதை ஆய்வு செய்து அவற்றை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து, போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, தங்களை இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story