ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3,850 தடுப்பூசிகள் ஒதுக்கீடு


ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3,850 தடுப்பூசிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 12 Jun 2021 8:18 PM IST (Updated: 12 Jun 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3 ஆயிரத்து 850 எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த தடுப்பூசிகள் 2-வது தவணைக்காக காத்திருப்பவர்களுக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3 ஆயிரத்து 850 எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த தடுப்பூசிகள் 2-வது தவணைக்காக காத்திருப்பவர்களுக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தடுப்பூசி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு முகாம்களில் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவ துறையினர், சுகாதாரத்துறையினர், போலீசார், முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
இதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற் பட்டோருக்கும், பின்னர் ஏப்ரல் மாதம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பின்னர் மே மாதம் முதல் அரசின் உத்தரவின்படி 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகளில் கடந்த வாரம் முதல்கட்டமாக ராமநாதபுரத்திற்கு 4 ஆயிரத்து 500 வந்தது. 
முன்னுரிமை
இதனை தொடர்ந்து 500 தடுப்பூசிகளும் வந்தன. இவை அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் போடப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து தடுப்பூசிகள் காலியாகி யாருக்கும் தடுப்பூசி போடப்படாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக முன்பதிவு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு ஒதுக்கீடு செய்த பின்னர்தான் தடுப்பூசி போடும்பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
கடந்த 4 நாட்களாக தடுப்பூசிகள் இல்லாத நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக அரசு 3 ஆயிரத்து 100 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 750 கோவேக்சின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ராமநாதபுரம் வட்டாரத்திற்கு 900, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 300, மண்டபம் வட்டாரத்திற்கு 800, திருப்புல்லாணி வட்டாரத்திற்கு 700, தொண்டி பகுதிக்கு 200, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிக்கு 200 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2-வது தவணை 
இதேபோல, கோவேக்சின் தடுப்பூசிகள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 200, ராமநாதபுரம் வட்டாரத்திற்கு 200, உச்சிப்புளி பகுதிக்கு 100, திருப்புல்லாணி வட்டாரத்திற்கு 200, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிக்கு 50 என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 
இந்த தடுப்பூசிகள் மேற்கண்ட பகுதிகளில் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு போடப்படும். அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அரசின் வழிகாட்டுதலின்படி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த தடுப்பூசிகள் அனைத்தும் அந்தந்்த பகுதிகளில் பிற்பகலுக்குள் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Next Story