அரசு ஜீப்பில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் சாராயம்-மதுபாட்டில்கள் பறிமுதல்
காரைக்காலில் இருந்து நாகைக்கு அரசு ஜீப்பில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜீப் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
காரைக்காலில் இருந்து நாகைக்கு அரசு ஜீப்பில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜீப் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அங்கிருந்து நாகை மாவட்டத்திற்குசிலர் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் சாராய பாட்டில்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஜீப்பில் சாராயம்-மதுபாட்டில்கள்
இந்த நிலையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே நடுக்கடை பஸ் நிறுத்தத்தில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அரசுக்கு சொந்தமான ஜீப் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த ஜீப்பை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த ஜீப்பில் 100 மதுபாட்டில்கள் மற்றும் 200 சாராய பாட்டில்கள் இருந்தது.
இதையடுத்து ஜீப்பில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜீப்பை ஓட்டி வந்தவர், நாகை மாவட்ட வேளாண்மை துறை பொறியியல் பிரிவுக்கு சொந்தமான அரசு ஜீப் டிரைவரான கீழ்வேளூரை சேர்ந்த ராஜேந்திரன்(வயது52) என்பதும், மற்றொருவர் அவரது உறவினர் காந்தி(65) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் காரைக்காலில் இருந்து மதுபானம், சாராய பாட்டில்களை கடத்தி வந்ததுள்ளனர்.
ஜீப் டிரைவர் உள்பட 2 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஜீப் டிரைவர் ராஜேந்திரன், காந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story