கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டான டி.டி.தினகரன் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, டி.டி.தினகரன் நகரில் தற்போது புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், அந்த சாலையில் குறிப்பிட்ட அளவு இடம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் தார்ச்சாலை அமைக்க கூடாது என்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது, சாலை அமைக்கும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், டி.டி.தினகரன் நகரில் ஏற்கனவே இருந்த சாலையின் அளவுபடி, புதிய சாலையை அமைக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story