கோவையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள்


கோவையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
x
கோவையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
தினத்தந்தி 12 Jun 2021 9:15 PM IST (Updated: 12 Jun 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது ஒரு வாரமாக அதன் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. 

ஆனால் பலி எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. மேலும் கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது போன்ற பல்வேறு காரணங்களால் கோவையில் தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7500 கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் மாநகராட்சி சார்பில் 5 மண்டலங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 இதுதவிர புறநகர் பகுதிகளில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், காரமடை, அன்னூர், கிணத்துக்கடவு போன்ற பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 கோவை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் 7500 கோவேக்சின் தடுப்பூசி வந்தது. அவை மாநகராட்சியில் உள்ள 75 இடங்களில் போடப்பட்டதால் வேகமாக தீர்ந்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று கோவை மாநகராட்சியில் துடியலூர், சரவணம்பட்டி, காளப்பட்டி, ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குறிச்சி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மண்டலங்களில் 36 மையங்களிலும் புறநகரில் 53 மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது. 

கோவை மாநகராட்சியின் 27,42வது வார்டு பகுதிகளை உள்ளடக்கிய சின்னவேடம்பட்டி பகுதியில் 190 நபர்கள் 2- ம் தவணை தடுப்பூசிசெலுத்திக்கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் முருகன், மேற்பார்வையாளர் சம்பத்குமார் ஆகியோர் செய்திருந்தனர் இதில் 2-வது தவணை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தடுப்பூசி மையங்களில் அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

எனவே சமூக இடைவெளியை கருதி, கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் வினியோகிக்கப்பட்டு அவர்கள் வரிசையில் நின்று முகக் கவசம் அணிந்தவாறு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 


மேலும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் தலைநகரான சென்னையைவிட கோவையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கோவைக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Next Story