கடன் தொகையை திரும்ப செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. கலெக்டர் அறிவுறுத்தல்
கடன் தொகையை திரும்ப செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. கலெக்டர் அறிவுறுத்தல்
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வியாபாரம், தொழில்கள் செய்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் பெற்றவர்கள் தங்களது கடன் தொகையினை திரும்ப செலுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. ஆனால் சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் தவணை திரும்ப செலுத்தும்படி மகளிர் சுயஉதவிக்குழுக்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வருகின்றன.
கடன் தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்த கூடாது. இதனை மீறி செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று செலுத்தாத கடன் தொகைக்கு கூடுதல் வட்டி விதிக்க கூடாது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்தால் 0416-2255765 என்ற தொலைபேசியிலும், 9629361193 என்ற செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதில், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செந்தில்குமரன், முன்னோடி வங்கி மேலாளர் ஜான்தியோடசியஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பொதுமேலாளர் தூயவன், நுண்நிதி நிறுவன ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story