பச்சை தேயிலையை வினியோகிக்க முடியாமல் விவசாயிகள் அவதி
கூடலூரில் கூட்டுறவு தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளதால், பச்சை தேயிலையை வினியோகிக்க முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலும் தோட்ட தொழிலாளர்களுக்கு தொற்று பரவியது. இது தொடர்பாக தனியார் மற்றும் அரசு தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருவது தெரியவந்தது. இதன் மூலம் மேலும் தொற்று பரவும் நிலை இருந்தது.
இதனால் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் கூடலூர் 2-ம் மைல் பகுதியில் உள்ள சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மட்டும் திறக்கப்படவில்லை. மேலும் தொழிற்சாலைக்கு செல்லும் சாலை இரும்பு தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு உள்ளது.
அங்கு சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் பச்சை தேயிலையை வினியோகிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தங்களது தோட்டங்களில் 2 வாரங்களுக்கும் மேலாக பச்சை தேயிலை பறிக்காமல் இருக்கின்றனர்.
இதனால் அவை முதிர்ச்சி அடைந்து வீணாகி வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கூடலூரில் கூட்டுறவு தொழிற்சாலை மட்டும் மூடி கிடக்கிறது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படவில்லை.
எனவே வேறு கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story