புவனகிரியில் பரபரப்பு கத்தியால் குத்தி பெண் படுகொலை கணவர் வெறிச்செயல்


புவனகிரியில் பரபரப்பு கத்தியால் குத்தி பெண் படுகொலை கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 Jun 2021 10:44 PM IST (Updated: 12 Jun 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் பெண்ணை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி, 


கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி சின்னப்பா முதலி தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் கரிகாலன் (வயது 50). பெயிண்டர். இவருடைய மனைவி பச்சையம்மாள். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சிவசங்கரி, கவுசல்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

கரிகாலன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கருதி, அவர் மீது பச்சையம்மாள் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கரிகாலன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி என்றும் பாராமல், பச்சையம்மாளை தலை, கழுத்து, உடம்பு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டி செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

 பின்னர் அங்கு பிணமாக கிடந்த பச்சையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தப்பி ஓட்டம்

இதற்கிடையே மனைவியை குத்தி கொலை செய்த, கரிகாலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story