கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 500-க்கு மேல் இருந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
முழு ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 419 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. 585 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த 4 நாட்களாக தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் தொற்று உறுதியாகி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,300-க்கு மேல் இருந்தது. இது படிப்படியாக குறைந்து, தற்போது 3 ஆயிரத்து 800 ஆக உள்ளது.
இதுவரை 20 ஆயிரத்து 789 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள் என 14 சிகிச்சை மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொற்று அறிகுறிகள் தென்பட்டு தாமதிக்காமல் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் பூரண குணம் அடைகின்றனர்.
தாமதமாக வருபவர்களுக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருக்கிறது. மொத்தம் 155 ஆக்சிஜன் படுக்கைகளில் 116 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 39 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
ஆனால் ஐ.சி.யூ. வார்டில் உள்ள 25 படுக்கைகளும் நிரம்பி உள்ளன. மொத்தமுள்ள 215 படுக்கைகளில் 57 படுக்கைகள் காலியாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். வெளியிடங்களில் இருந்து அதிகம் பேர் நீலகிரிக்கு வருவதை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால், பாதிப்பு சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story