நீலகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம்
பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீலகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் சார்லஸ். கடந்த ஓராண்டாக நீலகிரியில் பணிபுரிந்து வந்த அவர், அதற்கு முன்பு கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
இந்த நிலையில் சார்லஸ் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் பணிபுரிந்தபோது, அவருடன் பணியாற்றிய பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீஸ், உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பாலியல் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதன்படி நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் அவர் நீலகிரி மாவட்டத்திலேயே தங்கி இருக்க வேண்டும். அரசு அனுமதி இல்லாமல் வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் சார்லஸ் பணிபுரியும் போது, அவர் மீது பெண் போலீஸ் பாலியல் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் சார்லசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். அதற்கான நகல் அவரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story