முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா இல்லை
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா இல்லை என்று கள இயக்குனர் கவுசல் தகவல் தெரிவித்து உள்ளார்.
கூடலூர்,
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினி, உதயன், பொம்மன் உள்பட 28 வளர்ப்பு யானைகளிடம் சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனைக்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலகத்துக்கு நேற்று வந்தது.
அதில், 28 வளர்ப்பு யானைகளுக்கும் எந்தவித நோய் தொற்றும் இல்லை என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறியதாவது:-
முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடமும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உத்திரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story