குமரியில் 4 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி


குமரியில் 4 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 12 Jun 2021 11:21 PM IST (Updated: 12 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பின்பு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. பெண்கள் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு கொண்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பின்பு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. பெண்கள் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு கொண்டனர்.
11,100 டோஸ் தடுப்பூசி 
குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு 1,500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் 9,600 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தன. இவ்வாறு மொத்தம் 11,100 டோஸ் தடுப்பூசி வந்து சேர்ந்தன.
இந்த மருந்துகள் இரவோடு இரவாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து 4 நாட்களுக்கு பின்பு நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
வக்கீல்களுக்கு சிறப்பு முகாம்
கோவேக்சின் தடுப்பூசி தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் டதிபள்ளி ஆகியவற்றில் பொதுமக்களுக்கும், நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீல்களுக்கும் போடப்பட்டது. இதற்காக நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த சிறப்பு முகாமில் வக்கீல்கள், குமாஸ்தாக்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் என மொத்தம் 250 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன், செயலாளர் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 
மாநகர நகர் நல அதிகாரி கின்சால் மேற்பார்வையில் டாக்டர் சில்லி தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்
டதி பள்ளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி மட்டும் போடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நேற்று குறைவான அளவிலேயே மக்கள் வந்திருந்தனர். இதனால் மீதமிருந்த தடுப்பூசி மருந்துகளில் சிலருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்ததால் தடுப்பூசி போடும் பணியாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசியை செலுத்தினர்.
சமூக இடைவெளி
இதுதவிர நாகர்கோவில் குருசடி பள்ளியில் கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இடலாக்குடி பள்ளியில் நடந்த முகாமில் 400 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. வெட்டூர்ணிமடம் செயின்ட் அலோசியஸ் பள்ளியில் நடந்த முகாமில் 400 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில் 250 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணி நடந்தது. 
நாகர்கோவிலில் டதிபள்ளி தவிர சிறப்பு முகாம்கள் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. எனவே சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் வரைந்து அதில்  பொதுமக்களை நிற்க செய்தனர். சில இடங்களில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போட்டு பொதுமக்களை அமர வைத்தனர். 
ஏமாற்றம்
அதிகாரிகள் முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடச் செய்தனர். டோக்கன் வழங்கிய பிறகு வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
இதேபோல் கிராமப்புறங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கும் டோக்கன் முறையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குற்றியாறு
பேச்சிப்பாறை குற்றியாறு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அரவிந்த் பொதுமக்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த பகுதியில் தடுப்பூசி போடும் பணி குற்றியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 166 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story