மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 11:27 PM IST (Updated: 12 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய கேரள வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குழித்துறை:
மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய கேரள வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு போர்வெல் நிறுவனத்தில் வேலை செய்பவர் ரஞ்சித்குமார் (வயது 35). சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல், நேற்று முன்தினம் அதிகாலை 5½ மணிக்கு மார்த்தாண்டம் அருகே உள்ள புல்லாணியைச் சேர்ந்த ஆன்றோ லிபின் (29) என்பவருடைய மோட்டார் சைக்கிளை வெட்டு மணியில் நிறுத்தி வைத்திருந்த போது மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த இரு சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மடக்கி பிடித்தனர்
இதற்கிடையே அதே நாள் காலை 8 மணிக்கு மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த ஜாண் தயா (41) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டம் சந்திப்பு அருகே மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி விட்டு, அங்கு சிகிச்சை பெரும் உறவினரை பார்க்க சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அவருடைய மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் திருடி செல்ல முயன்றார். உடனே, அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 
வாலிபர் கைது
அந்த வாலிபரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, அவர் கேரள மாநிலம் பொழியூர் தெற்கு கொல்லங்கோடு மீனவர் காலனியை சேர்ந்த டேனியல் (24) என்பதும், பம்மம் போர்வெல் நிறுவன ஊழியர் ரஞ்சித் குமார், புல்லாணியை சேர்ந்த ஆன்றோ லிபின் ஆகியோரின் மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. மேலும், இந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் டேனியல் 10 மணி நேரத்துக்குள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து டேனியல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து மோட்டார் சைக்கிள்களைபறிமுதல் செய்தனர். 

Next Story