கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவி
குளச்சல் அருகே கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியை போலீசார் மீட்டனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியை போலீசார் மீட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராணுவ வீரர் மனைவி
குளச்சல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கும், திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சொந்த ஊரில் இளம்பெண், மாமியாருடன் தங்கியதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த இளம்பெண், தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
சங்கிலியால் கட்டி...
அங்கு மாமியாரை பற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறி வேதனை அடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை கண்ட இளம்பெண்ணின் பெற்றோர், மகளுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்து குளச்சல் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கும் அவருக்கு இருந்த மனரீதியான பிரச்சினை தீரவில்லை. பிறகு அவரை சங்கிலியால் கட்டி தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே விடுமுறையில் ஊருக்கு வந்த கணவர், கோவிலுக்கு சென்று மனைவியை பார்த்துள்ளார். அவரும் வந்த வேகத்தில், என்ன ஏதென்று விசாரிக்காமல் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் கதறி அழுதார்.
போலீசார் மீட்டனர்
உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், இதுபற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராணுவ வீரருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இளம்பெண்ணை, சங்கிலியால் கோவிலில் கட்டி போட சொன்னது யார்? கோவிலில் அவர் சித்ரவதை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story